Wednesday, July 28, 2010

வெளிவரட்டும் தமிழனின் உண்மையான வரலாறு!




2010 – மார்ச் மூன்றாவது வாரம்…..

”ஈழத்தில் இனப்படுகொலை தீவிரமாக நடைபெற்ற வேளையில் என்னைப் போன்றவர்கள் தூக்க மாத்திரை போட்டுக்கொண்டுதான் தூங்கினோம். எத்தனை நாளைக்குத்தான் சாவை கேட்டுக் கொண்டே இருப்பது. நாளைக்கு சாகப் போகிறார்கள் மனிதர்கள் என்று தெரிந்தால் எப்படித் தூக்கம் வரும்?

இந்தப் படுகொலையை நேரடியாக ஆதரித்தவர்கள், மறைமுகமாக ஆதரித்தவர்கள் மீதான ஆத்திரம் எனது உயிர் மூச்சு உள்ளவரை நீடித்திருக்கும்.

தூக்கமில்லாமல் கழிந்த இரவுகள் திரும்பத் திரும்ப நினைவுக்கு வருகின்றன. அதனாலே செம்மொழி மாநாட்டில் கலந்துகொள்ளப் போவதில்லை. கலைஞர் கூப்பிட்டதினால் சிவத்தம்பி போகலாம். நான் போக மாட்டேன்.”

- பேராசிரியர் ”தொ.ப” என்றழைக்கப்படும் தொ.பரமசிவன் “சண்டே இந்தியன்” இதழுக்கு அளித்த பேட்டி.

24-03-2010 – பாளையங்கோட்டை.

”எங்கள் அன்பிற்குரிய ”தொ.ப” அவர்களே…… உங்களது இந்த உணர்வுதான் எங்களை இங்கு வரவைத்திருக்கிறது. நீங்கள் மட்டுமில்லை நாங்களும் கலந்து கொள்ளப்போவதில்லை. செம்மொழி மாநாட்டின் போது இங்கு வந்து உங்கள் வீட்டுத் தாழ்வாரத்தில் அமர்ந்து தமிழ் கற்றுக்கொள்வோமே ஒழிய….. ஒருபோதும் அங்கிருக்க மாட்டோம்…..” என்று அன்று அவரது மணிவிழாவில் பேசியபடி செம்மொழி மாநாட்டுத் துவக்க விழாவன்று கோவையை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தோம் நாங்கள். இது ஒரு நூதன நாடுகடத்தல். ஆம்….. வேறு வகையில் சொல்வதானால் தன்னைத் தானே நாடு கடத்திக் கொள்வது.(Self Deportatation). எங்கள் வாகனம் கோவையை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கையில் “உடன்பிறப்புகளது” எண்ணற்ற வாகனங்கள் செம்மொழியைச் “செழுமைப்படுத்த” ஊருக்குள் நுழைந்து கொண்டிருந்தன.

முதல் பொழுது…… செயல்படாத தமிழ்ச்சங்கம் இருக்கும் மதுரையில் கழிய மறுநாள் பயணமானோம் தோழன் தொ.ப.வின் திசை நோக்கி திருநெல்வேலிக்கு. வழக்கமாக இலக்கிய சங்கமம் நிகழும் தெற்கு பஜார் சாலையின் தேநீர்க்கடையில் நண்பர்களோடு தேநீர் சாப்பிடலாம் என காலை வைத்தால்……

“என்னது…. மேடையில் சொன்னமாதிரியே வந்துட்டீக…..?” என ஆச்சர்யம் அகலாமல் கேட்டார் சாலையில் புத்தகக்கடை வைத்திருக்கும் தோழர்.

மேடையில் ஒன்று…… மேடையை விட்டிறங்கினால் மற்றொன்று…… என பார்த்துப் பார்த்துச் சலித்த பூமியாயிற்றே இது. பாவம் அவர் என்ன செய்வார் அதற்கு?

வீட்டினுள் நுழையும்போது.தமிழிசையில் தூள் கிளப்பிக் கொண்டிருக்கும் மம்முது அவர்களின் “தமிழிசைப் பேரகராதி” என்கிற நூலை வாசித்துக் கொண்டிருந்தார் தொ.பரமசிவன்.

எங்கள் பேச்சு எது பல்லவி? எது அனுபல்லவி? அனுராகம் என்பது எது? என்கிற திசையில் நகரத் தொடங்கியது.

உடன் வந்த நண்பர் “அனு” என்றால் என்ன? என்று கேட்க….. ”அனு” என்றால் ”தொட்டடுத்து வருவது” என்றார் தொ.ப. நமக்குத் தெரிந்ததெல்லாம்….. அனுபல்லவி தியேட்டரும்…… நடிகை அனுராதாவும்தான்.

இந்தித் திணிப்பிற்கெதிராக குரல் கொடுத்த பரவஸ்த ராஜகோபாலாச்சாரியார் யார்?

”அபிதகுஜலாம்பாள்” என்பதற்கான அர்த்தம் என்ன?

திராவிட இனத்துக்காக டி.எம்.நாயர் ஆற்றிய பங்குகள் என்னென்ன?

மருதநாயகம் என்றழைக்கப்படும் கான்சாகிப் குறித்து சிலிர்க்க வைக்கும் அம்சங்கள் எவையெவை?

என எண்ணற்ற விஷயங்கள் வந்து விழ விழ மண்டையே சூடாகிப் போனது.

பேச்சு “ஆதிச்சநல்லூர்” பக்கம் திசை மாற…… அதென்ன ஆதிச்ச நல்லூர்? அங்கென்ன இருக்கிறது? என்றேன். சுற்றியிருந்த நண்பர்கள் கூட்டம் என்னை ஏற இறங்கப் பார்த்தது. நான் தான் அறியாமைக்கென்றே அவதாரம் எடுத்தவனாயிற்றே….. அப்புறம் எப்படிப் புரியும் அதெல்லாம்?

”தொ.ப.” சிரித்துக் கொண்டே…. ”நாளை நாம் நேரிலேயே போய் பார்க்கலாம்… ஆதிச்சநல்லூரைப் பற்றி அங்கு வைத்தே விளக்கிச் சொல்கிறேன்.” என்றார்.

கோவையில் இருந்து சென்ற நண்பர்களோடு திருநெல்வேலி தோழர்களும் இணைந்து கொள்ள அங்கிருந்து இருபத்தி நாலு கிலோமீட்டர் பயணம். சாலையின் ஓரத்தில் தெரியும் ஒரு பொட்டல் காட்டில் வண்டியை நிறுத்தச் சொல்கிறார் ”தொ.ப.”

“இதுதான் ஆதிச்ச நல்லூர்”

இதென்ன சுடுகாடு மாதிரி இருக்கிறது…… இதைப்போய்….. என்று நண்பர்கள் இழுக்க…..

“உண்மைதான். ஆனால் இது இடுகாடு. ஏறத்தாள மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக நமது மக்கள் நாகரீகத்தோடு வாழ்ந்த ஊர் இதுதான்” என்கிறார் அந்த பொட்டல் வெளியைக் காட்டி.

ஒன்றும் புரியாமல் முழித்தவர்களைப் பார்த்து “இன்னும் கொஞ்ச தூரம் நடப்போம் வாங்க….” என முன்னே செல்கிறார் தொ.ப.

ஏறக்குறைய இருபது அடி கூட நடந்திருக்க மாட்டோம்…… காலுக்குக் கீழே சிதில் சிதிலாய் ஓடுகள்…… சில கறுப்பில்…. சில சிவப்பில்…..

“இதுதான் அந்த மக்கள் பயன்படுத்திய மண்பாண்டங்களின் மிச்சம்….. அதோ அதன் வாய்ப் பகுதி….. எவ்வளவு நேர்த்தியான வேலைப்பாட்டுடன் உருவாக்கியிருக்கிறார்கள் பாருங்கள்…….” என ஒவ்வொன்றாக சொல்லிக் கொண்டே போக வியப்பில் பிரமித்துப் போய் நிற்கிறோம் நாங்கள்.

ஆதிச்சநல்லூரின் ஆதி வரலாற்றைச் சொல்லத் தொடங்குகிறார் தொ.ப.

”ஏறக்குறைய கிருஸ்து பிறப்பதற்கு எண்ணூறு வருடங்கள் முன்பே இங்கு நாகரீகம் மிகுந்த மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். இதனை முதன் முதலில் கண்டுபிடித்தவர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த டாக்டர். ஜாகர் என்பவர்தான். 1876 ஆம் ஆண்டு இந்த பகுதியில் ஆராய்ச்சிக்காக வந்த அவர் கண்டுபிடித்ததுதான் இந்தத் தொல் தமிழர்களது நாகரீகம். அந்த ஜாகர் தான் கண்டுபிடித்தவற்றில் பலவற்றை ஆதாரத்துக்காக ஜெர்மனுக்கே எடுத்துச் சென்றுவிட்டார். அப்பொருட்கள் இன்னமும் ஜெர்மனியில் உள்ள பெர்லின் அருங்காட்சியகத்தில் இருக்கிறது.” என்று நீண்ட பெருமூச்சோடு நிறுத்தியவர் அந்தப் பகுதியையே சுற்றும் முற்றும் கவனிக்கத் துவங்குகிறார்.

உடன் வந்த மற்றொரு நண்பர் அவர் விட்ட இடத்திலிருந்து பேசத் தொடங்குகிறார்.

“அதன் பின்பு வந்தவர்தான் இந்திய தொல்லியல் துறையைச் சார்ந்த ரியா. இவரும் இங்குள்ள மக்கள் பயன்படுத்திய முதுமக்கள் தாழி, ஆபரணங்கள், எழுத்துக்கள் போன்றவற்றை அகழ்வாராய்ச்சி மூலம் ஆராய்ந்து பார்த்து விட்டு அதிர்ச்சியில் உறைந்து போகிறார்” என முடிக்க…..

இதிலென்ன அதிர்ச்சி இருக்கிறது? என எல்லோரும் கும்பலாய் குரல் கொடுக்க……

“அவர்கள் பயன்படுத்திய இரும்பால் ஆன கருவிகள்தான்.” என தொடர்கிறார் தொ.ப.

”மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இங்கு வாழ்ந்த தமிழர்கள் இரும்பைப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்றால்….. அதை உருக்குவதற்கான உலைகளை எங்கு வைத்திருந்தார்கள்…. அதை செதுக்குவதற்கும் சீராக்குவதற்கும் எத்தகைய தொழில் நுட்பங்களைக் கையாண்டார்கள்…. அப்படியாயின் இவர்களது நாகரீகம்தான் மற்ற அனைத்து நாகரீகங்களுக்கும் முற்பட்ட நாகரீகமாக இருந்திருக்க வேண்டும்.”

அந்தக்கணம்தான் உறைக்கிறது எனக்கு. “கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்தகுடி” என்பதெல்லாம் நமது ஆட்கள் கொஞ்சம் ஓவராகப் பீலா காட்டிய விஷயமோ என்றிருந்த எனக்கு அவர் பேசப் பேச கிலி கிளப்புகிறது.

அந்த ஆதிச்சநல்லூரின் மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கும் பூமியில் ஒரு பரபரப்பான நகரமே இயங்கிக் கொண்டிருந்திருக்கிறது. அங்கு வாழ்ந்த மனிதர்கள் வெள்ளி, செம்பு, தங்கத்தால் ஆன ஆபரணங்களைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். அழகிய மதிற்சுவர்கள் இருந்திருக்கின்றன. ஆனால் இன்றைக்கு அது யாரும் கேள்வி கேட்பாரற்ற பொட்டல்காடு.

ஏனிந்த நிலைமை என்றோம் ஏக்கத்தோடு.

”எல்லாம் அரசியல்தான்” என்றார் பேராசிரியர்.”தொ.ப.” வருத்தத்தோடு.

“இந்த ஆய்வுகளை ஒப்புக் கொண்டால் உலகின் தொல் நாகரீகமே தமிழர்களுடையது என்றாகிவிடுகிறது. அப்படியாயின் வெள்ளையர்களும் வடக்கத்தியர்களும் கண்டுபிடித்தவை எல்லாம் இதற்குப் பிந்தைய நாகரீகங்கள்தான் என்பதை ஒப்புக்கொண்டதாகி விடும். இதுதான் பிரச்சனை. இப்போது இங்குள்ள 150 ஏக்கர் நிலைத்தை மத்திய அரசின் தொல்லியல் துறை சுற்றி வளைத்து கையகப்படுத்தி வைத்திருக்கிறது. 2005 ஆம் ஆண்டு அத்துறை செய்த ஆய்வுகளின் முடிவுகளைக் கூட இன்னமும் வெளிவிடாமல் வைத்திருக்கிறது. வேறு யாரும் இங்கு ஆய்வுகளை மேற்கொள்ளக் கூடாது என்று ஒரு உத்தரவையும் போட்டிருக்கிறது. இதுதான் இன்றைய சோகம்.” என்று தொ.ப.கூறி முடித்தபோது எங்களது கனத்த மெளனங்களையும் தாண்டி காற்றுமட்டும் பலத்த சலசலப்போடு எதையோ சொல்லிக் கொண்டிருந்தது.

சரி….இங்கு எடுத்துச் சென்ற பொருட்களையெல்லாம் இங்கேயே கொண்டு வந்து சேர்த்து ஒரு அருங்காட்சியகமாவது வைக்கலாமே… என்றேன்.

”அருங்காட்சியகமும் வரட்டும். ஆனால் அதற்கு முன்னதாக பூமிக்குள் புதைத்து வைக்கப்பட்டிருக்கிற தமிழனின் வரலாறு வெளியே வரட்டும். அதுவும் உலக வரலாறுகளையே புரட்டிப்போட இருக்கிற உண்மையான வரலாறு.”என்றார் அழுத்தம்திருத்தமாக.

யார் இதைச் செய்ய வேண்டியது?

”மத்திய அரசு.”

அதைச் செய்யவைப்பது?

”மாநில அரசு.”

துன்பம் வரும் வேளையிலும் சிரிக்கத்தானே சொல்லியிருக்கிறார் வள்ளுவர்?.

சிரிக்கத் தொடங்கினோம் நாங்கள்.

எல்லாம் முடிந்து வண்டியில் ஏறும் போது மீண்டும் ஒரு முறை திரும்பிப் பார்த்தேன் பொட்டல் காட்டை.

இப்போது அது பொட்டல் காடாய்த் தெரியவில்லை எனக்கு.

July 14, 2010 நன்றி: தோழர் பாமரன்

www.pamaran.wordpress.com

No comments:

Post a Comment